மரண தண்டனை நிறைவேற நான் கையெழுத்திடமாட்டேன் உயர் நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி அறிவிப்பு.
மரண தண்டனையை நிறைவேற்றத் தான் கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்தபோதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை நீதிமன்றில் அறிவித்தார்.
விஜித் மல்லல்கொட, எல்.ரீ.பி. தெஹிதெனிய மற்றும் முருது பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வினவியபோது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தனது கையொப்பத்தை, இனிமேல் பயன்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என்று அரசு கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்துள்ளது என்று நீதிமன்றில் தெரிவித்தார். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் விஜித் மலல்கொட மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம், இந்த மனுக்களை அடுத்த ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி ஆராயத் தீர்மானித்தது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளின் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குத் தாம் கையொப்பமிடத் தீர்மானித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஜூன் 26 அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் இந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கைதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் முடிவு அரச கொள்கைக்கு எதிரானது என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரானது, நியாயமற்றது என்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுக்கள் ஊடாக நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.