நேற்றைய போராட்டத்தில் கைதான 28 பேர் பிணையில் விடுவிப்பு (Video)
நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பயங்கரவாத சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.
மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது டெக்னிக்கல் சந்தியை வந்தடைந்த போது அதனை தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் அறிவித்தனர்.
இதனால் சூடான சூழல் உருவானது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
கைது செய்யப்பட்ட 28 பேர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை சரீர பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
பொது மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் தவறு விடும் போது அதை சுட்டிக் காட்டுவதற்காகவும் , ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவும் அனைத்து உரிமைகளும் மக்களுக்கு உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நிலத்தில் அமர்ந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் புகைப்படங்களை தான் நீதிமன்றத்திற்கு காண்பித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.