ஜெ. தீபா தற்கொலை முயற்சி..? மருத்துவமனையில் அனுமதி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குடும்பத்தில் ஏற்பட்ட மோதலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரும், அதிமுகவின் அப்போதைய இடைக்காலப் பொதுச் செயலாளருமான சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பின்னர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, 24,832 சதுர அடிகொண்ட போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக அறிவித்து அதிமுக அரசு கைப்பற்றியது. இதற்கு எதிராக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட சட்டப்போராட்ட்துக்கு பின்னர் போயஸ் இல்லம் முழுவதுமாக தீபா மற்றும் தீபக்கிற்கு கிடைத்தது.
ஆனால், அவ்வப்போது போயஸ் இல்லத்துக்கு வந்து செல்லும் தீபா தனது கணவர் மாதவனுடன் தி. நகரில் வசித்து வருகிறார். ஜெ., மறைவுக்கு பிறகு கட்சியை அமைத்து அரசியலுக்குள் வந்த தீபாவுக்கு தொண்டர்கள் ஆதரவு பெருகியது.
ஆனால், தீபாவுக்கும், கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்தனர். குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தீபாவால் அரசியலில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், தீபாவுக்கு இருந்த ஆதரவு படிப்படியாக குறைந்தது. மீண்டும் மாதவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் தீபா.
இந்த நிலையில், கணவன் மாதவனுடன் தீபாவுக்கு மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தில் மோதல் உருவாகியதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் தீபா உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது நெருங்கிய வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.