நான் பிறந்த காலத்தில் இங்கிலாந்துக்கும் கடன் கொடுக்கக் கூடிய நாடாக இலங்கை இருந்தது – ரணில்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டுவது இந்த நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் என்றும், திவால் நிலை மற்றும் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் உள்ள சிரமத்திலிருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான தெளிவான சான்றாக இருக்கும் என ஜனாதிபதி வலியுறுத்துகிறார்.
நிதியத்தின் ஆதரவுடன் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், இது புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பமாக இருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நம்பிக்கை எனவும் குறிப்பிட்டார். அதற்கு மக்கள் ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தான் பிறக்கும் போது ஆசியாவிலேயே சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியிருந்ததாகவும், எந்தவொரு நாட்டிற்கும் கடன் இல்லாமல் இலங்கை இருந்ததாகவும் , இங்கிலாந்துக்குக் கூட கடன் கொடுப்பதற்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பை இலங்கை அக்காலத்தில் கொண்டிருந்ததாகவும், ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.