6 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மாற்றுத் திறனாளியை குடும்பத்துடன் சேர்த்து வைத்த ஆதார்!
6 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போயிருந்த 21 வயது மாற்றுத்திறனாளியை ஆதார் கார்டு, அவரது குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளது. இந்த செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாற்றுத்திறனாளி (பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்) 2016 நவம்பர் மாதம் காணாமல் போயுள்ளார்.
தொலைந்து போன மாற்றுத் திறனாளி சிறுவன் 2016 நவம்பர் 28 அன்று நாக்பூர் ரயில் நிலையத்தில் கண்டறியப்பட்டான். இந்த சிறுவனுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாததால் ரயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பகத்தினர் சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என பெயரிட்டனர்.
இந்த சிறுவனின் அடையாளத்தை ஆதாரில் பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் சென்றிருந்தார். ஆனால், அந்த சிறுவனின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் பொருந்தியிருந்ததால் இங்கு புதிய ஆதார் எண்ணினை உருவாக்க முடியவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள தனித்துவ அடையாள எண் ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு அந்த அதிகாரி சென்றார். அங்கு பரிசோதித்துப் பார்த்ததில் பீகாரின் ககாரியா மாவட்டத்தில் சச்சின் குமார் என்ற பெயருடன் 2016இல் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதன் பின்னர், அந்த சிறுவனின் முகவரிக்கு காவல்துறை மூலம் தகவல் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, மாற்றுத் திறனாளியின் தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூர் வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம். சச்சின் குமார் மீண்டும் அவனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தனிநபர் அடையாளமாக ஆதார் எண்ணை உருவாக்கி அதன் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்கள் நலத் திட்டங்களைத் தாண்டி இதுபோல காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை மீண்டும் சேர்த்து வைக்கவும் இது உதவும் என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளது.