லிவ் இன் தாக்கத்தால் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரமாக மாறிய திருமணம் – விவாகரத்து வழக்கில் கேரளா நீதிபதிகள் வருத்தம்

கேரளா மாநிலத்தில் விவகாரத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த காலத்தில் குடும்ப அமைப்பானது லிவ் இன் தாக்கத்தால் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரமாக மாறியுள்ளதாக பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அம்மாநில உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த நபருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தனது மனைவி சமீப காலமாக தன்னிடம் தொடர்ந்து சண்டை போட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். எனக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகிப்பதாக அவர் புகார் கோரி மனைவி உடன் இணைந்து வாழ முடியாது விவகாரத்து வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.மனு தாரரின் கோரிக்கை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் திருமணம் மற்றும் உறவு குறித்து முக்கிய கருத்துக்களை தீர்ப்பின் வாயிலாக கூறியுள்ளனர். இந்த கால இளம் தலைமுறையினர், திருமணத்தை தீய கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். தனது சுதந்திர வாழ்க்கையை அது பறிப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். மனைவி என்ற ஆங்கில பதம், ‘WIFE’ as ‘Worry Invited For Ever’ என்று நினைத்துக் கொள்கின்றனர். யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் திருமண வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நன்றாகவே தெரிகிறது. தேவைப்படும் போது குட் பை சொல்ல வசதியாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்கள் அதிகரித்துவிட்டன.
ஒரு காலத்தில் ஆரோக்கியமான குடும்ப அமைப்புகளுக்கு பெயர் போன கேரளாவில் தற்போது சுயநலம் சார்ந்த காரணங்களுக்காக மண உறவுகள் முறிந்து குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த எதிர்கால சமூகத்தையே பாதிக்கும். திருமணம் என்பது ஒரு சாதாரண சடங்கோ,பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் அமைப்போ அல்ல. அது சமூகத்தின் ஆதாரமான அடித்தளம் எனக் கூறி விவாகரத்து கோரிக்கை மனுவை ரத்து செய்துள்ளார்.