SJB அலுவலகத்தில் இறந்த சகுந்தலாவின் மரணம் கொலையா? தற்கொலையா?
கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்திற்குள் இறந்த சகுந்தலாவின் (36) மரணம் கொலையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை மாவட்ட SJB தொகுதி அமைப்பாளர் லக்ஷ்மன் திஸாநாயக்கவுக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், சகுந்தலா , அந்த அலுவலகத்தில் சில காலமாக பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கேகாலை ஹபுதுகல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய இந்த பெண்ணை நேற்று முன்தினம் (01) காலை SJB கேகாலை மாவட்ட அமைப்பாளர் சென்று அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சகுந்தலா இந்த வாரம் தனது திருமணத்தை பதிவை செய்ய தயாராகி, கிராம அதிகாரி ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். முதலில் திருமணத்தை பதிவு செய்துவிட்டு, அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அதன் காரணமாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கேகாலை, களுகல்ல வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று காலை 8.15க்கும் 8.30க்கும் இடையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண், கட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த போது, லக்ஷ்மன் திஸாநாயக்கவின் வர்த்தகப் பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பராமரித்து வந்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள அறையில் உள்ள கட்டிலில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கேகாலை ஹபுதுகல கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய அஹங்கம விதான ராலலாகே சகுந்தலா வீரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லக்ஷ்மன் திஸாநாயக்க நேற்று முன் தினம் (01) அவரது வீட்டிற்குச் சென்று லக்ஷ்மன் திஸாநாயக்கவின் வாகனத்திலேயே அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் , அவரை அப்படி அழைத்துச் செல்வது வழமையான செயல் என்றும், இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இருவரும் அலுவலகத்திற்கு உள்ளே வந்த சில நிமிடங்களில் மரணம் நிகழ்ந்துள்ளது. அப்போது அலுவலகத்தில் இவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லாதிருந்துள்ளது.
வலது கையில் ரிவால்வருடன் அவள் கை அவள் தலைக்கு அருகில் காணக் கூடியதாக இருந்துள்ளது. ஆயுதம் வைத்திருக்கும் விதம் வழக்கத்திற்கு மாறானதாகவும் மார்புப் பகுதியிலேயே துப்பாக்கிச் சூடு தாக்கியதாகவும் , மார்பு பகுதியில் புகுந்த தோட்டா பின்பகுதி வழியாக வெளியேறியுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிப்பதற்கு பதிலாக லக்ஷ்மன் திஸாநாயக்க, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அந்த யுவதியின் சகோதரனிடம் முதலில் தெரிவித்து , அவரது சகோதரி சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சகோதரர் அங்கு வந்து , சகோதரி இறந்துள்ளதை பார்த்த பின்னரே , அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் காலையில் தன்னுடன் சகுந்தலா அலுவலகத்திற்கு வந்ததாகவும், இறந்தவர் அறைக்குச் சென்ற சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், சென்று பார்த்த போது, அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்திருப்பதை தான் கண்டதாகவும் லக்ஷ்மன் திஸாநாயக்க, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பொலிஸ் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சீசீடிவீ கமரா தரவுகளை ஆராய்ந்த போது , லக்ஷ்மன் திஸாநாயக்கவே முதலில் அறைக்குள் நுழைவது தெரியவந்துள்ளது. அவளை அங்கு வருமாறு கை சமிக்ஞை செய்து அவர் அங்கு செல்வதும், அவரது சமிக்கைக்கு பின் சகுந்தலா செல்வதும் கமராவில் பதிவாகியுள்ளது.
அதன்படி அவள் அங்கு சென்ற சுமார் 14 நிமிடங்களுக்குப் பிறகு, அவர் பீதியுடன் அறையை விட்டு வெளியே வருவதும் , அருகில் உள்ள தொட்டியில் கைகளை கழுவிவிட்டு, அவளது சகோதரருக்கு போன் செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திருமணமாகாத இப்பெண் அண்மையில் கிராம அதிகாரி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்கமைவாக இருவருக்கும் இடையிலான திருமணப் பதிவு எதிர்வரும் ஒரு நாளில் நடைபெறவிருந்ததாகவும் , பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. இவர்களது திருமண நிகழ்வை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தவும் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
இறந்து கிடக்கும் உடல் படுக்கையில் இருக்கும் விதமும், மேலிருந்து கீழாக தூரத்தில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் எனும் பார்வையும், இந்த பெண்ணுக்கு கைத்துப்பாக்கி எப்படி கிடைத்தது எனும் சந்தேகங்களையும் கொண்டு புலனாய்வு துறையினரது விசாரணைகள் தொடர்கின்றன.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இறந்துள்ள பெண் தற்கொலை செய்து கொண்டிருக்காலாம் என்பதை விட , கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுவதாகவும் , மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கிடைக்கும் அறிக்கை மூலம், இறந்தவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தெளிவாக தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.