இலங்கைக்கு இந்தியா உணவுக் கப்பல்; சீனாவோ உளவுக் கப்பல் – சபையில் சாடினார் கூட்டமைப்பு எம்.பி. ஜனா.
“இலங்கைக்கு இந்தியா உணவுக் கப்பல்களை அனுப்பும்போது சீனா இலங்கைக்கு உளவுக் கப்பலையே அனுப்புகின்றது.”
– இவ்வாறு சாடினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா).
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் நேரத்தில் உதவிய நாடு இந்தியா மட்டுமே. கடந்த பொருளாதார நெருக்கடியில் 4 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கடனாக இந்தியா வழங்கியுள்ளது.
குறைந்த வட்டியில் 800 மில்லியன் டொலர்கள் உணவுக்காகவும் மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் இந்தியா வழங்கியிருக்கின்றது.
கடன் அடிப்படையில் 700 மில்லியன் டொலர்கள் எரிபொருளுக்கு இந்தியா வழங்கியிருக்கின்றது.
இரசாயன உரத்துக்கு 55 மில்லியன் டொலர்கள் வழங்கி இந்தியா உதவியிருக்கின்றது.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்யும், அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு, பால்மா, மருந்துப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா இந்தக் கால கட்டங்களில் எங்களுக்கு உதவிக் கப்பல்களை அனுப்புகின்றது. உணவுக்கப்பலை அனுப்புகின்றது.
ஆனால், இலங்கைக்கான கடனைக்கூட மறுசீரமைக்க முடியாது எனக் கூறும் சீனா இலங்கைக்கு உளவுக் கப்பலையே அனுப்புகின்றது.
இந்த நாடாளுமன்றத்திலே செங்கோல் வரும்போது நிற்க முடியாத அத்துரலிய ரத்தன தேரர் சீனாவிலிருந்து அந்த உளவுக் கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வரும்போது அங்கு சென்று அந்த உளவுக்கப்பலுக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்கின்றார். இதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு” – என்றார்.