ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து ஆறுதல் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி …!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. அதில் முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்று பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் தொடரில் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பின்ச் ஆகியோர் களம் இறங்கினர்.
ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் வார்னர் ( 94 ரன்) மற்றும் மேக்ஸ்வெல்லை (19) தவிர அனைவரும் ஒற்றை இலக்குடன் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பேப்வே அணி தரப்பில் ரியான் பர்ல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைடானோ மற்றும் மருமானி களம் இறங்கினர்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கைடானோ 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து மருமானியுடன் ஜோடி சேர்ந்த மதேவேரே ( 2 ரன் ), சீன் வில்லியம்ஸ் ( 0 ) டக்-அவுட், சிக்கந்தர் ராசா ( 8 ரன்) என யாரும் நீடிக்கவில்லை. பொறுமையாக ஆடிய மருமானி 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிரீன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து கேப்டன் சகபாவா மற்றும் முனியாங்கோ சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடினர். இதில் முனியாங்கோ 17 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சகபாவா 37 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன், ஸ்டோய்னிஸ், ஆகர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.