சீன கடன் செயலி மோசடி வழக்குகள்:பெங்களூரில் அமலாக்கத் துறை சோதனை

சீன கடன் செயலிகள் வழக்குத் தொடா்பாக கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பேடிஎம், ரேஸா்பே, கேஷ்ஃப்ரீ உள்ளிட்ட இணையவழி நிதிச் சேவை நிறுவனங்களில் அமலாக்கத் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
சீனா்களால் நிா்வகிக்கப்படும் கடன் செயலிகள் மூலம் சிறிய அளவில் கடன் பெற்றவா்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவா்களிடம் வலுக்கட்டாயமாகப் பணம் பறிக்கப்படுவதாகவும் பெங்களூரு குற்றப் பிரிவு காவல் துறையினா் 18 வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.
அந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில், பொய்யான ஆவணங்கள் மூலம் இந்தியா்களை போலி இயக்குநா்களாக்கி, சீனா்களின் கடன் செயலி நிறுவனங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இணையவழி நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வைத்திருக்கும் பல்வேறு வணிக அடையாள எண் (மொ்ச்சன்ட் ஐடி), வங்கிக் கணக்குகள் மூலம் சீன கடன் செயலி நிறுவனங்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.
அந்த நிறுவனங்களுக்கு பதிவு செய்யப்பட்ட முகவரிகள் உள்ளன. மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை வலைதளத்தில் அந்த நிறுவனங்களின் முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அந்த முகவரிகளில் அந்நிறுவனங்கள் செயல்படவில்லை. மாறாக அந்த நிறுவனங்களுக்கு போலி முகவரிகள் உள்ளன.
இதுதொடா்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டபோது வணிக அடையாள எண் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்த அந்த நிறுவனங்களின் ரூ.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக பெங்களூரில் உள்ள 6 இடங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை சனிக்கிழமையும் நீடித்தது. பேடிஎம், ரேஸா்பே, கேஷ்ஃப்ரீ உள்ளிட்ட இணையவழி நிதிச் சேவை நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.