2030க்குள் உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும்.. நிபுணர்கள் கணிப்பு
உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச அமைப்பான ஐஎம்எஃப் ஆய்வறிக்கை அன்மையில் வெளியானது. இதில், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த காலாண்டு நிலவரப்படி, பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனி நாடாக இருந்த இந்தியா தற்போது அந்நாட்டை பொருளாதாரத்தில் முந்தியுள்ளது.
இந்நிலையில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆலோசகர் சவுமியா கந்தி கோஷ் ஆய்வில் தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டு ஜெர்மனியை இந்தியா தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில், 2029ஆம் ஆண்டு ஜப்பானை தாண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முதல் காலாண்டிற்கான ஜிடிபி தரவுகளை மத்திய அரசு பகிர்ந்து கொண்ட பின் சில நாள்களில் இந்த ஆய்வு அறிக்கை தகவல்கள் வெளியானது.
ஜூன் 2022 காலாண்டில் (Q1 FY23) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2021-22 Q1 இல் பதிவுசெய்யப்பட்ட 20.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 13.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அறிக்கைகளின்படி, நமது இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதமாக வளர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட குறைவாக இருக்கிறது.