எதிர்கால தலைவர்களை உருவாக்க மொட்டின் அரசியல் பாடசாலை…
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்முயற்சி எடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தனது அரசியல் தலைவர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி நிறுவனத்தை நேற்று (03) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவ அகாடமியானது அரசியலில் ஈடுபட விரும்பும் நபர்களை இனங்கண்டு அவர்களின் தலைமைத்துவத் திறனை வளர்க்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டது என அதன் ஆரம்ப பாடசாலைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
இந்த தலைமைத்துவ அகாடமியின் முதலாவது அமர்வு நேற்று (03) ஸ்ரீ ஜயவர்தனபுர இம்பீரியல் மொனார்க் ஹோட்டலில் இடம்பெற்றதுடன், முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் எரந்த கினிகே, செய்திப் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் விரிவுரைகளை ஆற்றினர்.
இந்த புதிய நிறுவனம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு விளம்பரத்தில் , உள்ளூரிலும், உலக அளவிலும் அரசியல் தலைமைக்கு பற்றாக்குறை நிலவுவதால், தேசிய அளவில் மாகாண சபைகள், உள்ளூராட்சியின் அரசியல் கட்டமைப்புகள் ஆகியவற்றில் தலைமைத்துவ பண்புகளை கொண்ட அறிவும் திறமையும் கொண்ட புதிய தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைத்துவ அகாடமிக்கு பசில் ராஜபக்ஷ தலைமை தாங்குவதுடன், பாடசாலையின் ஆரம்பத் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆவார்.
அதுமட்டுமல்லாமல் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, பேராசிரியர் அஜத் திஸாநாயக்க, பேராசிரியர் ஜீவா நிரியெல்ல மொஹான் சமரநாயக்க, எரந்த கினிகே ஆகியோர் இந்த அகாடமியின் நிர்வாக சபை உறுப்பினர்களாக செயற்படுவர்.