பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த கோர்பச்சோவின் மறைவு : சண் தவராஜா
சோவியத் ஒன்றியத்தின் மேனாள் அரசுத் தலைவரான மிகைல் சேர்கேயேவிச் கோர்பச்சோவ் மரணத்தைத் தழுவியுள்ளார்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் ரஸ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஆகஸ்ட் 30 ஆம் திகதி இரவு இயற்கை எய்தினார்.
இறக்கும் போது அவருக்கு வயது 91.
உலகின் முதலாவது பொதுவுடமை நாடான சோவியத் ஒன்றியத்தில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த முதலாவது அரசுத் தலைவர் என்ற பெருமை பெற்ற அவர் அந்த நாட்டில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த ஒரேயோரு அரசுத் தலைவராகவும் விளங்குகின்றார்.
அதேபோன்று, உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தின் கடைசி அரசுத் தலைவரும் அவரே.
பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடந்த உலகை ஒன்றாக்கிய பெருமைக்கு உரியவராக மேற்குலகினால் கொண்டாடப்படும் அவர், மேற்குலகிற்கே சவால் விடும் வகையிலான ஒரு வல்லரசாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தைச் சிதைத்து, இன்றைய ரஸ்யாவை வல்லமை இழக்கச் செய்யக் காரணமாக விளங்கினார் என சொந்த நாட்டில் மிகவும் வெறுக்கப்படும் நபராகவும் உள்ளார்.
நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்று மனிதர்களுக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன.
அதிலும் அரசியல் வாதிகளுக்கு நிச்சயம் இரண்டு பக்கங்கள் இருந்தே ஆகவேண்டும்.
ஒரு சாராருக்கு நல்லவராகவும், இன்னோரு சாராருக்கு தீயவராகவும் தெரிவது அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை சகஜமான விடயம். இதற்கு வரலாறு முழுவதிலும் எண்ணுக் கணக்கில்லாத எடுத்துக் காட்டுகள் உள்ளன. ஒரு சாராரால் வெறுக்கப்படும் ஒரு அரசியல் தலைவர் மற்றொரு சாராரால் கொண்டாடப்படுவதும் இயல்பானதே.
இது விடயத்தில் கோர்பச்சோவ் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல. ஆனால், நடைமுறையில் ஒரு தலைவர் உள்நாட்டில் விரும்பப்படுவதும், வெளி நாடுகளில் வெறுக்கப்படுவதுமே பொதுமையானது. ஆனால், அவர் விடயத்தில் இது மறுதலையாக உள்ளது.
1931 மார்ச் 2ஆம் திகதி தெற்கு ரஸ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கோர்பச்சோவ் 11 மார்ச் 1985இல், தனது 54ஆவது வயதில், சோவியத் ஒன்றியத்தின் உயர் பதவியான பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார் என்றால் அது அவரின் தனிப்பட்ட முயற்சியால் மாத்திரமல்ல. அன்றைய சோவியத் ஒன்றியத்தின் மறைமுக ஆட்சியாளராக விளங்கிய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆதரவும் அவருக்கு இருந்ததாலேயே அவரால் குறுகிய காலத்தில் அந்தப் பதவியை அடைய முடிந்தது.
அவர் சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வந்த போதிலும், அவரது கையில் ஒரு வளமான நாடு இருக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
படைத் துறையினரின் செல்வாக்கு மிகுந்திருந்த நிலையில், படைத் துறை உற்பத்திகளில் காட்டப்பட்ட அக்கறை, மக்களின் அன்றாடத் தேவைகளில் காட்டப்படாத நிலைமை. அரசு பற்றி பொது வெளியில் விமர்சனங்களை முன்வைக்க முடியாத நிலைமை. சுதந்திரமான ஊடகங்கள் இல்லாத நிலைமை.
இத்தகைய சூழலில் பதவியைய் பொறுப்பேற்ற கோர்பச்சோவ் 1986இல் ‘பெரஸ்ரொய்க்கா’ என்ற பெயருடன் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார்.
அதேவேளை, சுமார் 15,000 வரையான சோவியத் படை வீரர்களின் உயிர்களைப் பலி கொண்டதும், பல பில்லியன் ரூபிள் பெறுமதியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதுமான ஆப்கானிஸ்தான் போரை நிறுத்தி, தமது படைகளை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பையும் வெளியிட்டார்.
தொடர்ந்து ‘கிளாஸ்னொஸ்ற்’ என்ற பெயரிலான பேச்சுச் சுதந்திரத் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் ஊடக சுதந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்களுக்கு இருந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.
பனிப் போர்க் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்துக்கும், மேற்குலகிற்கும் இடையில் நீடித்துவந்த ஆயுத போட்டா போட்டி அனைவரும் அறிந்த விடயம். அதிலும் சோவியத் ஒன்றியம் ஒரு ஆணுவாயுத வல்லரசாக இருந்தது. உலகில் அதிக எண்ணிக்கையான அணுவாயுதங்கள் சோவியத் ஒன்றியத்தின் வசமே இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவுடன் செய்து கொண்ட பல ஒப்பந்தங்கள் மூலம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டமை அவரின் சாதனைகளுள் முக்கியமானது. அனைத்திலும், சிறந்த சாதனையாக பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததே கருதப்படுகின்றது.
இதன் விளைவாக 1990ஆம் ஆண்டில் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோர்பச்சோவின் மறைவை ஒட்டி உலகின் பல நாட்டுத் தலைவர்களும் தங்கள் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக மேற்குலகத் தலைவர்கள் தங்கள் நண்பனை இழந்ததாகக் குறிப்பிட்டு அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அவர்கள் கோர்பச்சோவை தமது நண்பன் என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே. ஏனெனில், மேற்குலகம் எதனைச் செய்வதற்காக பல பத்தாண்டுகளாகத் திட்டம் தீட்டிச் செயற்பட்டு வந்ததோ அந்தப் பணியை கத்தியின்றி ரத்தமின்றி கோர்பச்சோவ் செய்து முடித்திருந்தார்.
ஆம், மேற்குலகின் பரம வைரியாகவும், பலமான எதிரியாகவும் விளங்கி வந்த சோவியத் ஒன்றியத்தை சிதைத்து அழித்து ஒரு புதிய வரலாறை அவர் எழுதியிருந்தார். அதனால், இன்றளவும் மேற்குலகில் அவர் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
ஆனால், ரஸ்யாவில் அவருக்கு எள்ளளவும் மதிப்பு இல்லாத நிலையே நீடித்தது.
1991ஆம் ஆண்டில் கோர்பச்சோவ் அரசியலில் இருந்து ஒதுங்கினார். அதுவும் கூட ஒருவகை நிர்ப்பந்தத்தின் விளைவாகவே நடந்தது. அன்றிலிருந்து, அவர் உள்நாட்டில் ஒரு செல்லாக் காசே.
ரஸ்யாவில் மட்டுமன்றி, பொதுவுடமைத் தத்துவத்தை தமது கொள்கையாகக் கொண்ட உலகெங்கும் பரந்து வாழும் மக்களும் கோர்பச்சோவை வெறுப்புடனேயே பார்க்கின்றனர்.
கோர்பச்சோவின் அன்றைய காலகட்டச் செயற்பாடுகள் சிலவேளை காலத்தின் கட்டாயமாகக் கூட இருந்திருக்கலாம். ஏனெனில், சோவியத் ஒன்றியத்தைச் சிதைக்கும் எண்ணம் கோர்பச்சோவிடம் கூட இருந்ததில்லை எனத் தெரிகின்றது.
பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட அவர், பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட போது 1920களில் லெனின் முன்வைத்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளின் வழியே தானும் செல்வதாகவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் எதுவானாலும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு என்பது இன்றளவும் ரஸ்யாவின் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகவே உள்ளது. அத்தகைய கருத்து தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும் அறிகுறிகளே தற்போதும் உள்ளன.