பற்றி எரிந்துகொண்டிருக்கிறது நாடு தீயை அணைக்க ஒன்றிணையுங்கள் – கம்மன்பில அழைப்பு.

“எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.”
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
விமல் வீரவன்ச தலைமையிலான ‘மேலவை இலங்கை கூட்டணி’யின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலகம் முழுவதும் கையேந்துவதே கொள்கைக் திட்டமாக உள்ளது. நாட்டை மீட்பதற்கான திட்டம் ஆளும் கட்சியிடமோ அல்லது எதிர்க்கட்சியிடமோ இல்லை. அதனால்தான் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
அழுத்தக் குழுவாக நாம் செயற்படுவோம். பிரச்சினைகளை பற்றி பேசுவதில் பயன் இல்லை, தீர்வுகளை பற்றி கதைக்கவே இந்தக் கூட்டணி.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர், சக்கரைப் பழக்கத்தை கைவிடாமல், அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதுபோலவே கடன் பொறிக்குள் இருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நடவடிக்கையையே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்” – என்றார்.