கோட்டாவுக்குப் பிரதமர் பதவியா? எந்தப் பேச்சும் நடைபெறவில்லை ஜனாதிபதி ஆலோசகர் விளக்கம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக நியமிப்பது பற்றியோ, வேறு எந்தப் பதவியையும் வழங்கும் தொடர்பிலோ எந்தப் பேச்சும் நடைபெறவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களளிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.
தான் அரசியலில் நீடிப்பதா? இல்லையா? என்பதை கோட்டாபய இன்னும் தீர்மானிக்கவில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவருக்குப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.