சீனாவில் நிலநடுக்கம்: 46 பேர் பலி.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 46 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் சிசுவான் மாகாணத்தின் லுாடிங் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, 46 பேர் உயிரிழந்துள்ளனர்; பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. சேத மதிப்பு வெளியிடப்படவில்லை.
சிசுவான் மாகாணம், திபெத்துக்கு அருகில் உள்ளது. இங்கு நிலநடுக்கம் அதிக அளவில் நடக்கும்.சிசுவான் மாகாணத்தில் 2008ல், 8.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது, 69 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த 2013ல், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான பூகம்பத்தில், 200 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இங்கு கடும் வறட்சி, வெப்பநிலை உயர்வு என, பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், இந்த மாகாணத்தில் நிலநடுக்கமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.