அரசியல் பக்கம் தலை வைக்காதீர்! – கோட்டாவுக்கு வெல்கம எச்சரிக்கை.
“நீங்கள் நாட்டுக்கு வந்தது நல்லது. மனைவியுடன் நிம்மதியாக ஓய்வுகாலத்தைக் கழிக்கவும். தயவு செய்து அரசியல் பக்கம் வந்துவிட வேண்டாம். பிறகு நாம் மௌனம் காக்க மாட்டோம்.”
இவ்வாறு புதிய இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மஹிந்த ராஜபக்ச நல்லவர். ஆனால், நாட்டை விடவும் அவருக்குக் குடும்பம்தான் முக்கியம். உரிய காலத்தில் அவர் ஓய்வு பெற்றிருந்தால் தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் தெரியாது. அதனால்தான் பதுங்குகுழி ஊடாக ஓட வேண்டியேற்பட்டது.
தற்போது அவர் நாட்டுக்கு வந்துள்ளார். நல்லது, ஆனால் தயவு செய்து அரசியல் களத்துக்கு வந்துவிட வேண்டாம். பிரதமர் பதவி வழங்கலாம் என சிலர் ஏமாற்றலாம். அதனை நம்பிவிடக்கூடாது.
நாமும் நாடாளுமன்றத்தில்தான் உள்ளோம். சும்மா இருக்கமாட்டோம்.
‘மொட்டு’க் கட்சியினர் ஜனாதிபதி ரணிலின் காலை வாருவார்கள். முன்னோக்கிப் பயணிக்க இடமளிக்கமாட்டார்கள்.
எனவே, ஜனாதிபதி, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்” – என்றார்.