மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவின் முதல் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளனர். அதற்கு இன்று இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அவசரக் கால உபயோகத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கையாக மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு தற்போது அவசரக் கால ஒப்புதல் கிடைத்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த தடுப்பு மருந்தை “பிக் பூஸ்ட்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இது பிக் பூஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.பாரத் பயோடெக் நிறுவனத்தின் ChAd36-SARS-CoV-S COVID-19 (Chimpanzee Adenovirus Vectored) மூக்கு வழி அளிக்கும் மருந்து கொரோனாவிற்கு எதிராகப் போராடும் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இந்த வகை தடுப்பு மருந்து 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரின் பதிவில் இந்தியாவின் கொரோனா தடுப்பு போராட்டத்தில் இந்த மருந்து மேலும் உறுதியளிக்கும், அறிவியல் வழியில் கொரோனாவை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.