பின் இருக்கையில் இருப்பவர் சீட் பெல்ட் அணியாவிட்டாலும் அபராதம்.. சைரஸ் மிஸ்திரி மரணத்தை தொடர்ந்து நிதின் அட்கரி பேச்சு
கார்களின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சிட் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் குழும்பத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.
மும்பை அருகே செப்டம்பர் 4ம் தேதி நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய போது பால்கரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் 9 நிமிடங்களில் 20 கிலோமீட்டர் தூரத்தை கடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதிவேக பயணம் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டாலும் மற்றொரு முக்கிய காரணமாக சீட் பெல்ட் அணியாதது உள்ளது. உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் மற்றொரு நபர் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததும் சீட் பெல்ட் அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருக்கலாம் என்பது பரவலான கருத்தாக உள்ளது.
இந்நிலையில், CNN-News18 ஊடகத்திடம் இது தொடர்பாக பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘ விபத்துக்கான காரணம் குறித்து எந்தக் கருத்தையும் இப்போது கூறுவது சரியானதாக இருக்காது. ஆனால், அவரது விபத்து துரதிர்ஷ்டவசமானது. சைரஸ் மிஸ்திரி என்னுடைய நெருங்கிய நண்பர். ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது, சாலை பாதுகாப்பு என்பது நாட்டின் மிக உயர்ந்த நோக்கமாக உள்ளது’ என தெரிவித்தார்.
மேலும், உண்மையில், பின்சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கான சட்டம் ஏற்கனவே உள்ளது. சீட் பெல்ட் அணிவது கட்டாயம். முன்பக்கத்தில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால், அலாரம் அடிக்கும். இப்போது, உற்பத்தியாளர் பின் இருக்கைக்கும் அதைச் செய்யும் சட்டத்தை உருவாக்குகிறோம். பின் இருக்கையில் பெல்ட் அணியாமல் இருப்பவர்களைக் கண்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று கூறினார்.