நீட் தேர்வு : மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்து மறுசீரமைப்பது குறித்து ஆலோசித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,
தமிழ்நாட்டிலிருந்து 1,45,958 பேர் நீட் தேர்வை இந்த ஆண்டு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் அரசு மற்றும் அரசுப் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 17,517 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு தொடர் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 104 மற்றும் 1100 என்ற உதவி எண் மூலம் 110 மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. 564 மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர ஆலோசனை மற்றும் கண்காணிப்பு வழங்கப்படுகிறது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மன நல ஆலோசகர் கொண்ட குழு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன உளைச்சல் இருந்தால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள எண்களுக்கு பெற்றோர்கள் அழைக்கலாம்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மற்றும் career guidance அடுத்து என்ன படிக்கலாம் என்ற ஆலோசனைகள் கல்வி மற்றும் மருத்துவத்துறை இணைந்து வழங்கவுள்ளோம் பெற்றோர்கள் பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் அதிகமானவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் வேறு வழியில்லாமல் தான் எழுதுகிறார்கள்.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் பேசி பதில் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களில் பதில் அனுப்பி வைக்கப்படும். 38 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் செவிலியர் கல்லூரிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.