பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்துக்கு எல்லை இல்லை
– தெளிவான பிரதி இருக்குமாயின் போதுமானது
– பதிவாளர் நாயகம் அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு
பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுப்படியாகும் காலம் வரையறைக்குட்பட்டது அல்ல என, பதிவாளர் நாயக திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ. அபேவர்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு சில விடயங்களுக்கான விண்ணப்பத்தின்போது, 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டுமென சில நிறுவனங்கள் கோரிக்கை விடுப்பதால், பொதுமக்கள் பாரிய அளவில் திணைக்களத்தை நாடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக, பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பதிவாளர் நாயகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் அமைய, பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளுக்கு செல்லுப்படியாகும் காலம் உள்ளதாக கருதாமல் அங்கீகரிக்குமாறு பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களது நிறுவனத்தில் சேவை பெறுநர்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள தெளிவான சான்றிதழ் பிரதியொன்று இருக்குமாயின், மீண்டும் புதிய பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என, பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதெனுமொரு நிலையில், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் மாத்திரம் திருத்தப்பட்ட புதிய பிரதியை அந்தந்த நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ. அபேவர்தன தெரிவித்துள்ளார்.