சரத் வீரசேகர இனவெறியர் – கஜேந்திரன் பதிலடி.
“மக்களுக்கும் சிறுவர்களுக்கும்தான் போஷாக்குப் பிரச்சினை. ஆனால், இங்குள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகி கொழுப்புப் பிரச்சினை.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிள்ளைகள், தாய்மாரின் மந்த போசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தென்பகுதியில் உள்ளவர்களை விடவும் போஷாக்கற்ற நிலைமை தொடர்பில் நாம் நன்கு அறிவோம். நாம் அதற்குள் வாழ்ந்தவர்கள். அதனால் இப்போதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். இப்போது நீங்கள் இது தொடர்பில் பேசுவதில் மகிழ்ச்சி.
போஷாக்கற்ற நிலையால் மக்களும் சிறுவர்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இங்குள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழுப்புப் பிரச்சினை. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பலர் இங்கு இனவாதம் பேசுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீர சேகர ஓர் இனவெறியர். அவர் விவாதத்துக்குரிய தலைப்பில் பேசாது குருந்தூர் மலை தொடர்பில் பேசும்போது மௌனிகளாக இருந்த சில,ர் நான் அந்த விடயம் தொடர்பில் பேசும்போது விவாதத்தின் தலைப்புக்கு முரணாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.
குருந்தூர் மலை விடயத்தில் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். எமது உயிரைக்கொடுத்தாவது ஆக்கிரமிப்பைத் தடுப்போம்” – என்றார்.