ஆபாச படம் பார்த்து தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்.. நல்வழிப்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்து, பாலியல் குற்றவாளியாக மாறும் இளைஞர்களை சீர்திருத்த , கவன்சிலிங் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
தென் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், 6 வயது குழந்தையை பாலியல் துன்புறத்தல் செய்துள்ளார். அந்த நிகழ்வை சக நண்பர் வீடியோ பதிவு செய்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில், 18 வயது இளைஞர், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், அந்த 18 வயது இளைஞர் எங்கு உள்ளார் என கேட்டு, இளைஞரின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில், சுமார் 18 வயதுடையவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மற்றும் இணை குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் . இவர்கள் இப்போது “பாலியல் குற்றவாளி” என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர். 18 வயது இளைஞர் கல்லூரியில் படிக்க வேண்டிய வயதில் சிறையில் உள்ளார்.
இணையம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது மற்றும் இது இளம் வயதினர் ( டீனேஜர்கள்) மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செல்போன் மூலம் இளைஞர்களுக்கு ஆபாசம் எளிதில் சென்றடைகிறது. இதனால் இளைஞர்கள் ஹார்மோன் மாற்றங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் வயதில் குழப்பமடைந்து தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
18 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் மன ஓட்டத்தை கவனிக்க முயற்சி எடுக்க வேண்டும். ஒரு இளைஞரை சிறையில் அடைப்பதன் நோக்கம், அவரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இருந்து தூக்கி எறிவது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்து, பாலியல் குற்றவாளியாக மாறும், இளைஞர்களை சீர்திருத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வகையான பாலியல் குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போதும் , அவர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போதும் சீர்திருத்தப்பட்டு, அவர்கள் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும். இந்த சீர்திருத்த முயற்சி எடுக்கப்படாவிட்டால், ஒரு டீன் ஏஜர் தனது முழு வாழ்க்கையையும் இழக்க நேரிடும். மேலும் அவர் ஒரு கடுமையான குற்றவாளியாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என கருத்து தெரிவித்து இளைஞரை சிறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.