தொழிற்சங்ககளின் தலையீடுகளைத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்த புதிய பிளான்
மின்வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தலையீடுகளை களைவதற்கும், தொழிற்சங்க தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொமுச, சி.ஐ.டியு, ஏ.ஐ.டி.சி.யு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மின்சார வாரியத்தில் தொழிற்சங்கங்களின் தலையீட்டை தடுக்கும் விதமாகவும், நியாயமான கோரிக்கை விடுக்கும் சங்கங்களின் கோரிக்கைகளை கேட்பதற்கும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பல தொழிற்சங்கங்கள் உள்ள காரணத்தினால் மின்சார வாரியத்தினால் பேச்சுவார்த்தையை சுமூகமாகவும், விரைந்தும் முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.
இதனை களையும் விதமாக, தொழிற்சங்கங்களை முறைப்படுத்தவும் அதிக அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான தொழிற்சங்கமாக அங்கீகரிக்கவும் மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், விரைவில் தொழிற்சங்க தேர்தலை நடத்துமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் 15% தொழிலாளர்களின் வாக்குகளை பெரும் சங்கத்திற்கு மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும், 15% குறைவாக வாக்குகளை பெறக்கூடிய தொழிற்சங்கங்களை ரத்து செய்வதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.