ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்த போதிலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சீராக இல்லாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால் ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சம்பிரதாய மோதலில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித்கான், முஜீப் ரகுமான் ஆகிய தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 3 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.