பெங்களூரு வெள்ளம்: ஐடி நிறுவனங்கள் படகு வாங்க திட்டம்?
தொடர்ந்து இரண்டு நாள்கள் கனமழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூருவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், பாதுகாப்புக் கருதி படகுகளை வாங்கி வைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை ஏதேனும் பேரிடர் நேரிட்டு, தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அல்லது ஊழியர்களின் குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள நேரிட்டால், அவர்களை மீட்க தங்கள் கைவசம் ரப்பர் படகுகளோ அல்லது சிறிய ரக படகுகளோ இருந்தால் நல்லது என்று யோசனையை முன் வைக்கின்றனர்.
வெள்ளத்தில் படுபயங்கரமாக பாதிக்கப்பட்ட ஓஆர்ஆர் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம்தான் மீட்கப்பட்டனர்.
இந்த ஓஆர்ஆர் பகுதியில் மட்டும் மைக்ரோசாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களின் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்திருக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் படகுகளுடன் சேர்ந்து டிராக்டர்களும் கதாநாயகன்களாக மாறின. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில் பலரும் தங்களது மாளிகையிலிருந்து டிராக்டர் மூலமாகத்தான் வெளியேறினர். 50 ரூபாய் கொடுத்து டிராக்டரில் அலுவலகத்துக்குச் செல்லும் நிலைக்கு பெங்களூரு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மூழ்கிய பெங்களூரு
2 நாட்களாக பெங்களூரில் தொடா் மழை பெய்ததால், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகளில் வெள்ளநீா் புகுந்ததால், மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாக நோ்ந்தது. தனி வீடுகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலும் வெள்ளநீா் புகுந்துவிட்டதால், காா்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கிவிட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்களை செலுத்த முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாயினா். வீடுகளில் வெள்ளம்புகுந்த அவதிப்பட்ட மக்கள் டிராக்டா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதனையடுத்து, சாலைகள், குடியிருப்பு வளாகங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, பெங்களூரு நகா் புதன்கிழமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பியது. சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளநீா் அப்புறப்படுத்தப்பட்டதால் வாகனங்களின் நடமாட்டமும் பெருகியது. அடுத்த சில நாட்களில் பெங்களூரில் வெள்ளநீா் முழுமையாக வடிந்து இயல்பு நிலை திரும்பிவிடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.