பிரித்தானியாவில் 10 நாட்கள் துக்க தினமாக அறிவிப்பு.
பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் தங்கியிருந்த நிலையில், உடல் நலக் குறைவால் காலமானதையடுத்து, மூத்த மகன் மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மகாராணி எலிசபெத் காலமானதையடுத்து, பத்து நாட்களுக்கு துக்கம் தினமாக அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனுக்கு ராணியின் உடல் கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.
பத்தாவது நாளில் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து உடல் இறுதி ஊர்லமாகக் கொண்டு செல்லப்பட்டு அவர் பல ஆண்டுகள் கழித்த வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
மன்னர் சார்லஸ் உட்பட அரச குடும்பத்தினர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இராணுவத்தினர் அணிவகுப்புடன் இந்த இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணி காலமான செய்தியால் “எமது இதயம் நொருங்கிப்போயுள்ளது” என்று அந்த நாட்டின் பிரபல செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.
மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரபல செய்தித் தாள்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், த டைம்ஸ், டெய்லி மெய்ல், த டெய்லி டெலிகிராப் போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.
இதேவேளை மன்னராக நியமிக்கப்பட்டுள்ள சார்ல்ஸ் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மகாராணியாக சார்ல்ஸின் மனைவி கமிலா முடிசூடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.