டிஜிட்டல் கருவிகளிடம் இருந்து ஓய்வு.. 24 மணிநேரம் ‘டிஜிட்டல் விரதம்’ இருந்த ஜெயின் மக்கள்
நம்மிடையே டிஜிட்டல் கருவிகளான, ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தும் நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்மை அறியாமலேயே நமது நேரம் ஸ்மாட்ர் கருவிகள் பயன்பாட்டில் செலவாவதை கட்டுப்படுத்தும் விதமாக, புதியவகை யுக்தியை ஜெயின் சமூகம் கையில் எடுத்துள்ளது.
உணவு கட்டுப்பாடுக்காக உண்ணாவிரதம் இருப்பது போல, வாய் பேச்சு கட்டுப்பாடுக்காக மவுன விரதம் இருப்பது போலவே, டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த ‘டிஜிட்டல் விரதம்’என புதிய நடைமுறையை ஜெயின் சமூகம் கையில் எடுத்துள்ளது. ஜெயின் மக்களின் முக்கிய விழாவான பர்யூஷான் பர்வா தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேச மாநிலத்தில் 1000க்கும் மேற்பட்ட ஜெயின் மக்கள் டிஜிட்டல் விரதம் கடைபிடித்தனர்.
இதன் படி, இந்த மக்கள் அனைவரும் பேகம்கஞ்ச் பகுதியில் உள்ள ஜெயின் கோயிலில் ஒன்று கூடி, தங்களின் செல்போன், லேப்டாப், கம்ப்யூடர்கள் ஆகியவற்றை ஓரமாக வைத்துவிட்டு 24 மணிநேரம் டிஜிட்டல் உலகில் இருந்து தங்களை விடுவித்து கொண்டனர். இது தொடர்பாக ஜெயின் மதத் தலைவர் அஜய் ஜெயின் கூறுகையில், இந்த காலத்தில் பெரும்பாலானோர் தங்களை அறியாமல் டிஜிட்டல் அடிமைகளாக மாறியுள்ளனர்.
குறிப்பாக, பெரும்பாலான இளைஞர்கள் சமூக வலைத்தளம், ஆன்லைன் கேம்ஸ், ஆபாச படங்கள் போன்றவற்றால் தூண்டப்பட்டு தங்கள் வாழ்க்கை அதில் தொலைத்து விடுகின்றனர். அதில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த டிஜிட்டல் விரதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இது போல நிகழ்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.