தென் மாநிலங்களில் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சனை தீவிரமாக அதிகரிப்பு; ஆய்வில் தமிழகத்திற்கு எச்சரிக்கை
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நிலவும் உடல் பருமன் பிரச்சனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு தகவின்படி, தெற்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே உடல் பருமன் பாதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தென் மாநிலங்களில் உள்ள 120 மாவட்டங்களில் 15-49 வயதினரிடம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், கேரளாவில் 14 மாவட்டங்கள், ஆந்திராவில் 13 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், தெலங்கானாவில் 31 மாவட்டங்கள் அடங்கும். அதன்படி, உடல் பருமன் பிரச்னை தேசிய அளவில் மற்ற மாநிலங்களை விட தென் மாநில பெண்களிடம் 24% அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக, இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தேசிய சுகாதார ஆய்வு 4க்கும், தற்போது எடுக்கப்பட்டு வெளியான ஆய்வு 5க்கும் வேறுபாடுகள் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் உடல் பருமன் பிரச்சனை 3.3% அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக இந்த பிரச்சனை 9.5% அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 6.9%, கேரளாவில் 5.7% அதிகரித்துள்ளது.
தென் மாநிலங்களில் உயர் வகுப்பு மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் உடல் எடை பருமன் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர். 1998ஆம் ஆண்டில் இந்தியாவில் உடல் எடை பருமன் பிரச்னை 8.4% ஆக இருந்த நிலையில், 2015இல் அது 15.5% ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்னை வேகமாக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.