யாழ்.நகரத்தில் பொலித்தீனுக்கு 15 முதல் தடை

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் நிறைவேற்றுவதற்கு சபை நேற்று அனுமதி வழங்கியது. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும் அப்போது வர்த்தகர்கள் மற்றும் உணவகங்களின் கோரிக்கையின் பெயரில் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தினை மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் முடிவு நேற்றையதினம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் இடம் பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் இருப்பதனால் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் உடன் மாற்று பாவனைப் பொருளாக வாழை இலை தாமரை இலை, தேக்கம் இலை, வாழை மடல் போன்றவற்றை தயார் செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. பொலித்தீனைத்தடை செய்து, வாழை இலை போன்றவற்றைப் பயன்படுத்துமாறு கோரிய சமயம் உடனடியாக மாற்று ஏற்பாட்டினை செய்ய முடியாது , சிறிது கால அவகாசம் தேவை என வர்த்தக சங்கம் ஊடாகவும் நேரிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.