போர்க்குற்றச்சாட்டை ஏற்கமாட்டோம்; ஐ.நா. பொறுப்புடன் நடக்க வேண்டும்! – அரசு திட்டவட்டம்.
“இலங்கை மீது எந்தவொரு தரப்பினரும் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அதையும் மீறி எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஜெனிவாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரச குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் இது தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பதில் கூட்ட அமர்வில் தெரிவிக்கப்படும்.
எனினும், உங்கள் (சர்வதேச செய்தியாளர்) கேள்விக்கான பதிலாக, இலங்கை மீது எந்தவொரு தரப்பினரும் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
இதை மீறி எமது நாடு மீது போர்க்குற்றச்சாட்டை எவரும் முன்வைத்தால் அதை ஏற்க நாம் தயாரில்லை.
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த போர் முடிவுக்கு வந்ததே பெரிய விடயம்.
போரின்போது படையினரில் ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த படையினர் மீதோ அல்லது நாடு மீதோ போர்க்குற்றச்சாட்டை எந்தத் தரப்பும் முன்வைக்க முடியாது.
இலங்கை இறைமையுள்ள நாடு. தவறிழைத்த படையினருக்கு எதிரான விசாரணை உள்ளகப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதைவிடுத்து சர்வதேசப் பொறிமுறையூடான விசாரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்கமுடியாது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றது. போர்க்குற்றச்சாட்டு என்ற விவகாரம் இலங்கையில் இனங்களுக்கிடையில் திரும்பவும் பிளவை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
இந்த விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், அதன் உறுப்பு நாடுகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” – என்றார்.