பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம் யாழில் இன்று ஆரம்பம்.
இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான ஊர்தி வழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று இறுதியில் அம்பாந்தோட்டை நகரைச் சென்றடையவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி. சேயோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்தி வழிப் போராட்டம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தைச் சேகரிக்கவுள்ளதுடன் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.