பெயரளவுப் பதவிகளால் ‘மொட்டு’க் கட்சி ஏமாற்றம்.
இராஜாங்க அமைச்சர்களுக்குரிய பல்வேறு வரப்பிரசாதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுத்தப்பட்டுள்ளமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அறியமுடிகின்றது.
நேற்றுமுன்தினம் பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களில் அதிகளவானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே. இவர்களை விடவும் பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இராஜாங்க அமைச்சர்களுக்குரிய வரப்பிரசாதங்கள் பல நிறுத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அது பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகின்றது.
நேற்றுமுன்தினம் இராஜாங்க அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்கள், தமது இராஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவு தேவையில்லை என்று தெரிவித்திருந்தபோதும், ஏனைய வரப்பிரசாதங்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், அவர்கள் பலர் ஏற்கனவே அந்தந்த அமைச்சுக்களிடம் வாகனங்களைக் கோரியிருந்ததுடன், இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை காண்பித்து தமது வாகன உரிமைகள் மற்றும் அவற்றின் தேவைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
அவர்களின் கோரிக்கைக்கு அமைய புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரமுன இராஜாங்க அமைச்சர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.