ரேசன் கடை பெண் ஊழியர்களுக்கு 360 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் – தமிழக அரசு

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள் வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அரசுப்பள்ளி பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 9 மாத (270 நாட்கள்) மகப்பேறு விடுப்பு அறிவித்து தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.
இதனையடுத்து, நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் இந்த மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், இதற்கு தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் அரசுப்பள்ளி பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 9 மாதத்தில் இருந்து 12 மாத மகப்பேறு விடுப்பு அறிவித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, இயல்பாகவே நியாய விலை கடை பெண் விற்பனையாளர்களுக்கு பொருந்தும் என்ற கருத்து நிலவி வந்தாலும், பெண் ஊழியர்களுக்கு, மிகக் குறைந்த நாட்களே விடுப்பு வழங்கப்படுவதாகும், தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று புகார் எழுந்ததது.
இதனையடுத்து, பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “கூட்டுறவுத் துரையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்கள் வழங்குவது பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்