சிலரைப் போல் நான் பாஜக முன் கை கூப்பி சமரசம் செய்யமாட்டேன் – ராகுல் காந்தி திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சியின் “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை இன்று நான்காம் நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், யாத்திரையின் போது செய்தியாளர்கள் பாஜகவுடன் எதிர்க்கட்சியினர் சமரசம் செய்வது குறித்து கேள்வி எழுப்பினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு அனுக்கமாக மாறியுள்ளனர். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி ,”பாஜக அவர்களுக்கு தரும் அழுத்தத்தை தாங்க முடியமால் அவர்கள் கை கூப்பி பாஜகவுடன் சமாதானம் செய்து கொள்கின்றனர்.
ஆனால் என்னால் அவ்வாறு இருக்க முடியாது. அது என்னுடைய பண்பு அல்ல. ஒரு போதும் நான் அப்படி செய்ய மாட்டேன். எதிர்த்து போராடுவது சாதாரண விஷயம் கிடையாது. பலரும் எதிர்த்து நிற்க தயாராக இல்லை. பாஜகவுடன் சமரசம் செய்தால் அவர்களுக்கு தொல்லை இல்லாத வாழ்க்கை கிடைக்கலாம்.
நாட்டின் அனைத்து அமைப்புகளையும் பாஜக கையில் எடுத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகளை அனைவரும் அறிவார்கள். இந்த போராட்டம் என்பது இரு கட்சிகளுக்கு இடையேயானது அல்ல. இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பை காப்பதற்கான போராட்டம் இது. இந்த போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை. அவ்வாறு நான் பயிற்றுவிக்கப்பட்டவன் அல்ல ” என பதில் தெரிவித்துள்ளார்.