12ஆவது உலக தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறுகிறதா?
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் என்று கருதப்படக் கூடியது திருச்சி மாநகரம். தென் மாவட்டங்களில் நுழைவாயிலாக கருதப்படும் திருச்சிக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகபட்சம், 5 மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்பது திருச்சியின் சிறப்பம்சம். இத்தகைய சிறப்புமிக்க திருச்சியில் இதுவரை உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது இல்லை. அப்படி நடந்தால், திருச்சி சர்வதேச தமிழர்களின் கவனத்தைப் பெறும். தலைநகரத்திற்கு ஈடான உட்கட்டமைப்பு வசதிகளும் திருச்சியில் ஏற்படுத்தப்படும்.
இதனால், திருச்சியை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும்’ என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சியை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி இருந்தார். அம்மனுவில், ’11ஆவது தமிழ் மாநாடு சென்ற ஆண்டு அமெரிக்காவில் நடந்து முடிந்ததையடுத்து, 12வது உலகத் தமிழ்ச் சங்க மாநாடு திருச்சியில் நடத்தப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அனுப்பியுள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர், ‘கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ‘திருச்சியில் உலகத்தமிழ் மாநாடு நடத்துவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.