காகம் அமெரிக்காவுக்கு ; காத்தோர் சிறைக்கு! – சஜித் கடும் விசனம்.
“நாட்டை வங்குரோத்தாக்கிய காக்கை அமெரிக்கா செல்கின்றது. ஆனால், நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டை வங்குரோத்தாக்கிய காக்கை பஸில் ராஜபக்ச கூட சுதந்திரமாக அமெரிக்கா செல்கின்றார். இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே இந்நாட்டின் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு சிறைக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றது.
அன்று இந்நாட்டில் அடக்குமுறையை ஆரம்பித்தவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்காக அலரி மாளிகையில் திரண்ட குண்டர்கள்தான். அவர்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து பொதுப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியையும் பிரதமரையும் விரட்டியடித்தனர். ஆனால், அதற்குப் பதிலாக மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘மொட்டு’க்கு தனது நன்றிக் கடனை நிறைவேற்றி வருகின்றார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய தமது கடமைகளை மறந்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சக்களுக்கு கடன்பட்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ராஜபக்சக்களுக்கு கடன்பட்டிருக்கவில்லை” – என்றார்.