மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்.. பாட்டியும் பேரனும் பலியான சோகம்
தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீ சில்லா மாவட்டம் பசூல் நகர் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த பாட்டி பேரன் ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
ஜகத்தியாலா மாவட்டம் சல்ஹல் கிராமத்தை சேர்ந்த நரேஷ் என்பவர் குடும்பத்துடன் இன்று காலை காரில் ஹைதராபாத் சென்று கொண்டிருந்தார். கார் ராஜன்னா ஸ்ரீ சில்லா மாவட்டம் பசூல் நகர் அருகே காட்டாறு ஒன்றின் மீது இருக்கும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. சமீபத்தில் பெய்து கனமழை காரணமாக அந்த பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் பாலத்தை கடக்க முயன்ற காரை ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம் இழுத்து சென்றது. அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் கார் மழை வெள்ளத்தில் இழுத்து செயல்படப்படுவதை பார்த்து அதனை மீட்க முயன்றனர். ஆனால் மழை வெள்ளத்தின் வேகம் காரணமாக அவர்களால் மீட்க இயலவில்லை.
இந்த நிலையில் காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரத்துடன் வந்த காவல்துறை காரை மீட்கும் முயற்சி ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த டிரைவர் ரிசான், நரேஷ் ஆகியோர் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி நீந்தி கரையேறினர்.
காரில் இருந்த கங்கா, அவருடைய இரண்டு வயது பேரன் கிட்டு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே மரணமடைந்தனர். இந்த நிலையில் தீவிர முயற்சிக்குபின் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள வேமுல வாடா காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.