மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்… ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
மின்சாரக் கட்டண உயர்வு தான் “திராவிட மாடல்” போல என்று திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில், மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு உள்ளிட்ட போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பதாக சாடியுள்ளார்.
தமிழக அரசின் மின்கட்டண உயர்வு பேரதிர்ச்சியாக அமைந்திருப்பதாக கூறியுள்ள அவர், வரும் 2026ம் ஆண்டு வரை ஆண்டுக்கு தலா ஆறு விழுக்காடு மின் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டண உயர்வின் மூலம், ஆயிரம் யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் செலுத்தவேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் கட்டண உயர்வால் அனைத்து பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாகவும், இது வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
பண வீக்கம், சொத்துவரி உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, பால் விலை உயர்வு என பலவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் எரிகின்றன நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற ரீதியில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஒருவேளை இதுதான் திராவிட மாடல் அரசு போல எனவும் விமர்சித்துள்ளார்.