இபிஎஸ்-யிடம் வழங்கப்பட்ட அதிமுக அலுவலக சாவி – ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை!
அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அவர் அலுவலகத்துக்கு உரிமை கோர முடியாது என்றும், கட்சிப் பணத்தை கையாடல் செய்த அவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்கவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவையே செயல்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.