சர்வதேச விசாரணையே வேண்டும்! – செல்வம் எம்.பி. வலியுறுத்து.
காணாமல்போன உறவுகளுடைய புனிதப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையே அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடருக்கு ரெலோ சார்பாக சுரேன் குருசாமியை அனுப்பியிருக்கின்றோம். இரண்டு, மூன்று தினங்களில் நானும் செல்லலாம் என எண்ணியுள்ளேன். அது எந்தளவுக்குச் சாத்தியப்படுமோ தெரியவில்லை.
ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையிலே எங்களுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
காணாமல்போனவர்களுடைய உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய புனிதப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணை மிகவும் அவசியம்.
இந்தியா, அமெரிக்கா உட்பட ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சினை சார்பாக ஐ.நா. எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை வழங்க வேண்டும்” – என்றார்.