ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு வல்லமை உண்டு.. அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் சவுதி அரேபியாவுக்கு ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. அங்கு அந்நாட்டின் மன்னர் முகமது பின் சல்மானை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும் எரிசக்தி, வர்த்தகம், உட்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.
இந்நிலையில், இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா தகுதி படைந்த நாடு என்றுள்ளார். இதுகுறித்து அவர், தற்போதைய சர்வதேச சூழலின் யதார்த்தத்தை உணர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், அணு ஆயுத சக்தியாகவும், தொழில்நுட்ப மையமாகவும் திகழும் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்க அனைத்து தகுதியும் பெற்றுள்ளது.
இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வருவதால் சர்வதேச பாதுகாப்பு மேம்படுவதுடன், கவுன்சிலின் செயல்பாடும் உறுதி பெறும் என்றுள்ளார். உலகின் மதிப்பு மிக்க அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் சக்தி வாய்ந்த அமைப்பு அதன் பாதுகாப்பு கவுன்சில் தான்.
இதில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக தற்போது உள்ள நிலையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சியில் சமீப காலமாக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.