அரசியல் தீர்வு கோரி 43 ஆவது நாள் போராட்டம்!
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் முன்னெடுக்கப்படும் செயல் திட்டத்தின் 43 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து, “எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “நடமாடுவது எங்கள் உரிமை”, “பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்றுகூடுவது எங்கள் உரிமை” என்று கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகை தந்ததுடன் தங்களின் உரிமை கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இதில் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.