வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார்.

தமிழ் திரையுலகில் காமெடி அரசனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகர் வடிவேலு இன்று தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அனைத்து ரசிகர்களும், பல பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாமன்னன் படக்குழுவினருடன் நடிகர் வடிவேலு பிறந்தநாள் கொண்டாடினார். தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். நடிகர் வடிவேலு ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.