செகந்தராபாத் ஹோட்டலில் தீவிபத்து..சென்னையை சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் பலி
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் ஷோ ரூமில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஷோரூமின் இரண்டாவது தளத்தில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த எட்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிகல் பைக் ஷோரூம் என்ற பெயரில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
ஷோரூம் அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தனியார் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு பலர் தங்கி இருந்தனர். தீ விபத்து காரணமாக எழுந்த கரும்புகையில் சிக்கி லாட்ஜில் தங்கி இருந்த பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் உட்பட எட்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த சீதாராமன், பாலாஜி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளதுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.