தெருவிளக்கு திட்டத்தில் முறைகேடு.. ரூ.500 கோடி இழப்பு? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத்தில் ரெய்டு
தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.