விரைவில் நாடு முழுவதும் எல்க்ட்ரிக் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.. நிதின் கட்கரி தகவல்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தோ –அமெரிக்க வர்த்தக சபையின் 19ஆவது இந்தோ – அமெரிக்க பொருளாதார மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இந்தியாவின் போக்குவரத்தில் சாலைப் போக்குவரத்து மிக முக்கியத்துவம் வாய்ந்து . குறிப்பாக, நாட்டின் 70 சதவீத சரக்குப் போக்குவரத்து மற்றும் 90 சதவீத மக்கள் போக்குவரத்து சாலை வழியாக நடக்கிறது. எனவே, நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். சாலை போக்குவரத்து முறையை மின்மயமாக்க அரசு விரும்புகிறது. சோலார் மற்றும் காற்றாலை மூலம் செயல்படும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் திட்டங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது. நாடு முழுவதும் மின்சார நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுவருகிறது.
அவை சூரிய சக்தியால் இயக்கப்பட்டு அவை மூலம் கனரக வாகனங்கள், பேருந்துகள் சார்ஜ் செய்வதற்கு வசதி உருவாக்கித் தரப்படும். சுங்கச்சாவடிகளை சூரிய சக்தி மூலம் இயக்குவதை அரசு ஊக்குவிக்கிறது.
இது போன்ற புதிய திட்டங்களால் தொழில்கள் உருவாக்கப்பட்டு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குகின்றன. அரசு தற்போது கதி சக்தி திட்டத்தின் காரணமாக புதிய திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி வருகிறது. தற்போது சுமார் 26 பசுமைவழி விரைவு சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன என பேசினார். மாற்று எரிசக்தி பயன்பாடு தொடர்பாக நிதின் கட்கரி தொடர்ந்து பேசி புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் செல் வாகனங்களை ஊக்குவித்து பேசி வரும் அவர், பெட்ரோல், டீசல் எரிவாயுவில் எத்தனால் கலந்து மாற்று எரிவாயுவாக பயன்படுத்தும் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.