யாழ். மாநகர சபையில் சிரேஷ்ட உறுப்பினரின் கருத்துக்கள் புறக்கணிப்பு: செயலாளருக்கு கடும் எதிர்ப்பு

யாழ். மாநகரசபையின் ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சொலமன் சிறில் கொரோனா சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துக்கள் மாதாந்தப் பொதுக் கூட்ட அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு யாழ். மாநகரசபையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(25) மாநகரசபை மண்டபத்தில் சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் சபையின் யூலை மாத மாதாந்தப் பொதுக் கூட்ட அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதன்போது சபையின் ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சொலமன் சிறில் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த-05 ஆம் மாதம் இடம்பெற்ற மாநகரசபை அமர்வின் போது நான் கொரோனா சம்பந்தமாக உரையாற்றியிருந்தேன். ஆனால், இதுவரை நான் ஆற்றிய உரை சபையின் அறிக்கையில் இடம்பெறவில்லை.

தங்களுக்கு எதிரான சில வாக்கியங்கள் எனது உரையில் இடம்பெற்றிருந்தால் என்னுடன் கலந்துரையாடி அதனை நீக்கியிருக்கலாம். ஒவ்வொரு கூட்டத்தின் போதும் இதுதொடர்பாகச் சுட்டிக் காட்டி வந்த போதும் இதுவரை எனது உரை அறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த மாதாந்தப் பொதுக்கூட்ட அறிக்கையை நான் நிராகரிக்கின்றேன். இந்த அமர்வில் தொடர்ந்துமிருக்க வேண்டுமா? என யோசிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

உங்களின் முழு உரையும் அறிக்கையில் இடம்பெறாவிட்டாலும் நீங்கள் பேசிய விடயம் தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் தானே? என சபை முதல்வர் வினாவினார். இதற்குப் பதிலளித்த உறுப்பினர் சொலமன் சிறில் ஒன்றும் இடம்பெறவில்லை எனவும், சபை உத்தியோகத்தர்களைப் பாதிக்கும் என்பதாலேயே இவ்வாறு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதன்பின்னர் சபையின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், எல்லாமே சட்டத்திற்கமையச் செய்வதால் சபைக் கூட்டத்தில் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் கூற்றுக்கள் சபை அறிக்கையில் உள்ளடக்கப்படாலாகாது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கமையத் தான் செய்ய முடியுமெனவும் அதிகாரத் தொனியில் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட சபையின் ஈபிடிபி உறுப்பினர் மு.றெமிடீயஸ், நீங்கள் சொல்வது சரியென்றால் இந்தக் கூட்ட அறிக்கை ஏன் தயாரிக்கப்பட்டது? இதில் ஏன் ஏனைய விடயங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் செயலாளரை நோக்கி கேள்வியெழுப்பினார். நீங்கள் எங்களுக்குச் சட்டம் படிப்பிக்காதையுங்கோ எனவும் சபையின் செயலாளரைச் சாடினார்.

ஒரு கெளரவ உறுப்பினர் அதுவும் சிரேஷ்ட உறுப்பினர் மீண்டும் மீண்டும் தனது கருத்து அறிக்கையில் இடம்பெறவில்லை என வலியுறுத்தி வரும் நிலையில் நீங்கள் அதனைத் தட்டிக் கழித்துள்ள நிலையில் ஏன் இவ்வளவு பேரினதும் கருத்துக்களை மாத்திரம் இந்த அறிக்கையில் இணைத்துக் கொண்டீர்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பில் உறுப்பினர் மூன்று கூட்டங்களில் சுட்டிக் காட்டிய போதும் அவரது கருத்துக்கள் கூட்ட அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

சிரேஷ்ட உறுப்பினர் என்ற கெளரவத்துக்காகவாவது அவரது கருத்து அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது அவரது கருத்து இடம்பெறவில்லையெனக் குறிப்பிட்டு அடுத்த கூட்டத்தில் அந்தக் கருத்து இடம்பெறுமென உறுதியளிக்கப்பட்டதாவது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தவறைச் செயலாளர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இத்தகைய செயற்பாடு ஒரு கெளரவ உறுப்பினருக்குரிய கெளரவத்தை வழங்காமல் மறுதலித்ததாகவே கருதப்படும். ஆகவே, இதுகுறித்து முதல்வர் எங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

இதனையடுத்து சபை முதல்வர் தான் பதில் சொல்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஈபிடிபி உறுப்பினர் மு. றெமீடியஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் அதிகாரிகளை மதித்துத் தான் செயற்பட்டு வருகிறோம். ஆனால், உங்களுக்கு எதிராகச் செயற்படுவேன் என்பது போன்று தான் செயலாளர் பதில் சொல்கிறார். இதனை இந்த சபை ஏற்கக் கூடாது, அவரது இத்தகைய செயற்பாடு தங்கள் தலைமைக்கே அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல் எனவும் அவர் கடுமையாகச் சாடினார்.

இந்த விடயம் சம்பந்தமாக நீங்கள் என்ன கருத்து அறிக்கையில் இடம்பெற வேண்டுமென ஆதங்கப்படுகிறீர்கள்? என சபை முதல்வர் உறுப்பினர் சொலமன் சிறிலிடம் கேள்வியெழுப்பினார்.குறித்த அறிக்கையில் தனது கருத்துக்கள் இடம்பெற வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் நீங்கள் பேசும் அனைத்துக் கருத்துக்களையும் அறிக்கையில் சேர்க்க முடியாது. இதுதொடர்பான சிறு குறிப்பை மாத்திரம் அறிக்கையில் இணைத்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இதன்பின்னர் சபை உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் கருத்துத் தெரிவிக்கையில்,

சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் பிரசன்னமாகியிருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பான சர்ச்சையொன்று நாங்கள் கடந்த சபைக் கூட்டத்தின் போது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த போது உள்ளுராட்சி ஆணையாளரால் எங்களுக்குச் சொல்லப்பட்டது.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பேசுகின்ற பேச்சுக்களும், உறுப்பினர்கள் சபையில் கதைக்கின்ற விடயங்களையும் வைத்துக் கொண்டு அதிகாரிகள் இத்தகைய பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பதாலேயே அதிகாரிகளைச் சபை அரங்கிற்குள் தேவையில்லாமல் அனுமதிப்பதில்லை எனவும், தேவையேற்படின் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளை அழைத்துப் பேசும் அதிகாரம் முதல்வருக்கிருக்கிறது என்பதுவும் எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த விடயம் இன்று(நேற்று முன்தினம்) நிதர்சனமாகியிருக்கிறது என்பதனைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன் எனவும் சுட்டிக் காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.