சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தாமரை கோபுர நுழைவுச்சீட்டு..
தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு உள்நுழைவு கட்டணம் 20 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் சீனப் பிரஜைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் இந்த நுழைவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இவ்வாறான ஓர் நுழைவுச்சீட்டு மெய்யாகவே விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுவரையில் உறுதி செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.