86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து.. 257 கட்சிகள் செயல்படாதவை.. இந்திய தேர்தல் ஆணையம்

86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 257 கட்சிகள் செயல்படாதவை என்றும் அறிவித்துள்ளது.
தற்போது புதிதாக பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள 86 அரசியல் கட்சிகளையும் சேர்த்து பதிவு ரத்து செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரிபாா்க்கும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட முகவரியில் அந்த அரசியல் கட்சிகள் செயல்படாதது தெரியவந்ததாகவும் அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29A கீழ், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலகப் பணியாளர்கள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தாமதமின்றி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், பிகாா், தில்லி, கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகள் செயல்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகளும் உடனடியாக நீக்கப்படும். 1968 தோ்தல் சின்ன நடைமுறையின் கீழான பலன்களை இந்தக் கட்சிகள் இனி பெற முடியாது. அதுபோல, செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், எந்தவித பலனும் பெற முடியாது.